திருப்பதிசாரத்தில் தே.மு.தி.க.வினர் மறியல் போராட்டம்
- சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பபெறக் கோரி நடந்தது
- சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு
நாகர்கோவில் :
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பபெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் தே.மு.தி.க. கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் குமரி மாவட்ட தே.மு.தி.க.வினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், அவை தலைவர் அய்யாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் வைகுண்ட மணி, ஒன்றிய செயலாளர்கள் பரமராஜா, மைக்கேல் ரத்தினம், நாகராஜன், தங்ககிருஷ்ணன், புகாரி, ஜஸ்டின் பிரபு, செந்தில் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பாக்கியவதி, விஜயா, பாப்பா, வக்கீல் பொன் செல்வராஜன், செந்தில் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்ககோரி கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மறியல் போராட்டத்தையடுத்து திருப்பதிசாரம் சுங்கச்சாவடி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.