மாவிளை பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பணிகள் தடுத்து நிறுத்தம்
- மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன்.
கன்னியாகுமரி :
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட மாவிளை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கைளை தனியார் நிறுவனம் தொடங்கியது.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த சில வாரங்களாக டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் செல்போன் டவர் அமைப்பதற்கான பணியை அந்த நிறுவனத்தினர் மேற்கொண்டனர்.
இதுகுறித்து உடனடியாக இப்பகுதியில் உள்ள மக்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார். அதன்பேரில் உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன். குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக இந்த செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இல்லாவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.
அப்போது கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயராணி, கருங்கல் பேரூராட்சி வார்டு உறுப்பினர் வினோ மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.