திருவட்டார் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள்
- பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் நாளை முதல் இயக்கப்படுகிறது
- 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கன்னியாகுமரி:
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப்பின்னர் வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி கடந்த 29-ந்தேதி முதல் பூஜைகள் நடந்து வருகிறது.
ஐந்தாம் நாளான இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உச்சபூஜை, அத்தாழ பூஜை, தத்துவஹோமம், பரிகலசபூஜை, உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
அதை தொடர்ந்து அபிேஷகம் நடைபெற்றது மாலை 5 மணிக்கு திருவம்பாடி கிருஷ்ணன், குலசேகரப்பெருமாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு கலை இளமணி கக்கோடு செல்வி பவகேத்ரா குழுவினரின் பக்தி இன்னிசை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு நாமக்கல் நாட்டியாஞ்சலி டிரஸ்ட் திருமதி சர்மிதா பிள்ளை குழுவினரின் பரதநாட்டியம் நடைபெறுகிறது.
நேற்று விடுமுறை நாளானதால் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வந்திருந்தனர். மதியம் சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணன் கோவிலில் தயாரான சாமி சிலைகள் நேற்று முன் தினம் மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்குக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.5.70 லட்சம் செலவில் வெள்ளியில் செய்யப்பட்ட ஸ்ரீபலி விக்கிரகத்தை, சென்னையைச்சேர்ந்த விஷ்வ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா ஷேஷாத்திரி, கோவில் மேலாளர் மோகன் குமாரிடம் ஒப்படைத்தார்.
தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து கும்பாபிஷேக நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வர இருப்பதால் வாகனம் நிறுத்துவதற்காக 7 இடங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருவட்டார் சப்பாத்து அருகாமை உள்ள இடம் ஆற்றூர்.என்.வி.கே.எஸ்.டி. கல்வி நிறுவனம், ஆற்றூர் மரியா கல்லூரி வளாகம், கழுவன் திட்டையில் இருந்து ஆற்றுக்குச்செல்லும் பாதை, எக்செல் பள்ளி வளாகம், திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி, திருவட்டார் போக்குவரத்துக் கழக பணிமனை ஆகிய இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக வாகனங்கள் வருகை தந்தால் புத்தன்கடை புனித வியாகப்பர் ஆலய வளாகம், திருவட்டார் அருணாசலம் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும் என திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தெரிவித்தார்.
கும்பாபிஷேகம் நாள் நெருங்க நெருங்க கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நாளை (4-ந் தேதி) முதல் நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், அழகிய மண்டபம், தக்கலை ஆகிய இடங்களில் இருந்து திருவட்டாறுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஆறாம் நாளான நாளை காலை 9 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட செம்புக்கவசங்கள் பொருத்தும் பணி தொடங்குகிறது.