உள்ளூர் செய்திகள்

நாகராஜா கோவிலில் கூட்டம் அலைமோதியது

Published On 2023-06-11 07:02 GMT   |   Update On 2023-06-11 07:02 GMT
  • பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் சிறப்பு வழிபாடு
  • பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர்.

நாகர்கோவில், ஜூன்.11-

நாகர்கோவிலில் புகழ்பெற்ற நாகராஜா கோவிலுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை எனில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். காலையில் இருந்து மாலை வரை கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார் கள். பின்னர் அங்கு மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மூலவரான நாகராஜரை வழிபட்டனர். மேலும் பல பக்தர்கள் நாகராஜருக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர்.

மேலும் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் பெரும்பாலான பெற்றோர் பள்ளி செல்லும் தங்களது குழந்தைகளையும் கோவிலுக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாணவ-மாணவிகளும் கோவிலுக்கு வந்து நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டி சாமி கும்பிட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாகராஜா கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News