முதியோர் இல்லங்கள் அதிகரித்து கொண்டே செல்வது வேதனையளிக்கிறது
- தக்கலையில் சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனத்தலைவர் பேட்டி
- முதியோர்களது நோய்த் தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
கன்னியாகுமரி:
சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக உலக முதியோர் தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறித்து சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் ஜார்ஜ் பிலீஜின் தக்கலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதியவர்களை மகிழ்ச்சியோடு வைத்து கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. முதியோர் இல்லங்கள் இன்று அதிகரித்து கொண்டே செல்வது மிகுந்த வேதனையளிக்கிறது. வயதாகும் போது நீடித்து நிலைக்கும் நோய்கள் உருவாகி முதியோர்களின் உடலுறுப்புகள் செயலிழந்து போகவும் வாய்ப்புண்டு. இதனால், சுதந்திரமாக வாழும் திறனை அவர்கள் இழந்து போக நேரிடும். அவர்களது நோய்த் தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
முதியோருக்கான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதியோருக்கான சுகாதார பராமரிப்பு தேசியத் திட்டத்தின் கீழ் பல்வேறு நோய்த் தடுப்பு, குணப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கி வருகிறது.
பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு முதியோர் பேரளவில் நன்மைகளை வழங்குகின்றனர். இருப்பினும், பாரபட்சமும், சமூக புறக்கணிப்பும் தொடர்கின்றன. சமூகப் பொருளாதார அளவில் செயல் திறனுடனும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் முதிர்ந்து வரும் மக்கள் கூட்டம் திகழுவதை உறுதிப்படுத்த நாம் இந்த பாரபட்சத்தை களைந்தே தீர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.