இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் தவறு இல்லை
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கருத்து
- மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
நாகர்கோவில் :
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை பரப்பி மக்களை குழப்பி வருகிறார்கள். இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் தவறு இல்லை. ராகுல்காந்தி நடை பயணம் சென்றபோது அதற்கு பாரத் யோதார் என்றே பெயர் வைத்திருந்தார்.
பாரத் என்ற பெயர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள பெயர் தான். 2016-ம் ஆண்டில் இந்தியாவை பாரத் என அழைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு தெரிவிக்கையில், பாரத் என்று அழைக்க விரும்புவோர் பாரத் என்றும், இந்தியா என்று அழைக்க விரும்புவோர் இந்தியா என்றும் அழைக்கலாம். இது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் என தெளிவாக தெரிவித்ததுடன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-ல் எந்த மாற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலை இல்லை' எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.
மீண்டும் 2020-ல் இதே வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பாப்டேவிடம் இந்தியா என்று அழைப்பதா, பாரத் என்று அழைப்பதா என்ற வழக்கு ஒன்று வந்தது. இந்த மனுவை ரிட் மனுவாக மத்திய அரசுக்கு அனுப்பியது. இதன் மீது மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-ன் படி பாரத் என்ற பெயரை பயன்படுத்துவதில் எந்தவித தவறும் இல்லை என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் டாக்டர் அம்பேத்கார் அவர்களால் எப்போது வடிவமைக்கப்பட்டதோ, அப்போதே சட்டமன்ற அரசியலமைப்பு விதிகளின்படி இதுபற்றி விவாதம் வந்தது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாப்டே அனுப்பியிருந்த ரிட் மனு தொடர்பாக மத்திய அரசு பாரத் என்று அழைக்க முடிவு எடுத்திருக்கலாம். எனவே, இதன் வாயிலாக இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்று அழைப்பதில் எவ்வித தவறுமில்லை. இதை உணராமல் அரசியல் கட்சிகள் மக்களை குழப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.