நாளை ஈஸ்டர் கொண்டாட்டம் - கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி
- கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு
- உயிர்த்த இயேசுவின் சிறப்பு ஆசீர் வழங்கப்படும்
நாகர்கோவில் :
கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒறுத்தல் முயற்சி மற்றும் உபவாசம் போன்றவற்றில் ஈடுபட்டுவந்தனர்.
புனித வாரம் தொடங்கி யதையொட்டி கடந்த 2-ந்தேதி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனியும், 6-ந்தேதி புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று புனித வெள்ளி திருச்சி லுவை வழிபாடுகளும் நடந்தது. இன்று நள்ளிரவு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் பாஸ்கா திருவிழிப்பு சிறப்பு வழிபா டுகள் மற்றும் திருப்பலி நடக்கிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சியாக ஆலயத்தில் பாஸ்கா மெழுகுவர்த்தியில் ஒளியேற்றும் வழிபாடு நடைபெறும்.
பாஸ்கா மெழுகு வர்த்தியில் அலங்கரிக்கப் பட்ட சிலுவையில் பங்குத் தந்தையர்கள் "அகரமும் நகரமும் காலங்களும் அவருடையன, யுகங்களும் அவருடையன" என எழுத்தாணியால் வரை வார்கள். அதன்பின் மெழுகு வர்த்தியில் இயேசு வின் 5 காயங்கள் பதிவு செய்யப்படும். பின்னர் பாஸ்கா திரியில் ஒளி யேற்றப்படும். தொடர்ந்து மக்கள் ஆலயத்திற்குள் பவனியாக வருவார்கள். ஆலய வாசல் வந்தவுடன் பங்குத்தந்தை கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடுவார்.
அப்போது மக்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் அனைத்து மெழுகு திரிகளையும் பற்ற வைப்பார்கள். உடனே ஆலயத்தின் அனைத்து விளக்குகளும் ஒளி யேற்றப்படும்.தொடர்ந்து வார்த்தை, வழிபாடு தொடங்கும். பழைய ஏற்பாடு நூலில் இருந்து மூன்று வாசகமும், புதிய ஏற்பாட்டு நூலில் இருந்து இரண்டு வாசகமும் வாசிக்கப்படும். ஐந்து வாசகங்களுக்கும் பதிலுரை பாடல்களும் பாடப்படும். தொடர்ந்து உன்னதங் களிலே என்ற வானவர்கீதம் பாடப்படும். அப்போது இயேசு உயிர்த்தெழுதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து திருமுழுக்கு வழிபாடு, புனிதர்களின் மன்றாட்டு மாலை, தண்ணீருக்கு ஆசி வழங்கு தல் ஆகியவை நடைபெறும்.
அப்போது பங்கு தந்தை பாஸ்கா திரியை மூன்று முறை தண்ணீரில் வைத்து ஆசீர்வதிப்பார். தொடர்ந்து திருமுழுக்கு வாக்குறுதி களை புதுப்பித்தல், நம்பிக்கையாளர் மன்றாட்டு, இறைமக்கள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு, பாஸ்கா முகவுரை ஆகியவை நடைபெறும். இறுதியில் உயிர்த்த இயேசுவின் சிறப்பு ஆசீர் வழங்கப்படும். திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.
கோட்டார் சவேரியார் பேராலயம், நாகர்கோவில் அசிசி ஆலயம், புன்னை நகர் புனித லூர்து அன்னை ஆலயம், குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயம், தக்கலை எலியாசியார் ஆலயம், கண்டன்விளை புனித குழந்தை ஏசுவின் தெரசாள் ஆலயம் உள்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறும்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடற்கரை கிராமங்களில் இருந்து வேலைக்காக வெளியூர் சென்றவர்கள் பலரும் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இதனால் கடற்கைரை கிராமங்கள் களை கட்டி உள்ளன.
மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடை பெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.