கன்னியாகுமரியில் உலக சுற்றுலா தின விழா விழிப்புணர்வு பேரணி
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
- மாணவ -மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் "மறுசிந்தனையில் சுற்றுலா" என்ற தலைப்பில் உலக சுற்றுலா தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரியில் இன்று காலை சுற்றுலா விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி சுற்றுலா அலுவலர் கீதாராணி, கல்லூரிமுதன்மை செயல் அலுவலர் மணிகிருஷ்ணா, முதல்வர் ராஜசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப்பேரணி கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்த சந்திப்பு, சர்ச் ரோடு சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டான சந்திப்பு, வழியாக காந்தி மண்டபம் முன்பு சென்றடைந்தது. பேரணியில் கல்லூரி மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது கைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுலா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் இன்று பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளுக்கு படகுத்துறையில் வைத்து சுற்றுலாத் துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகம் இட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
குமரி மாவட்ட உதவி சுற்றுலா அதிகாரிகள் சதீஷ்குமார், கீதாராணி ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக மேலாளர் செல்லப்பா துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன், மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு இடையே சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவையொட்டி பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிஉள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.