கன்னியாகுமரி தனியார் பார்களில் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
- டி.எஸ்.பி. மகேஷ்குமார் எச்சரிக்கை
- உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் இருந்து தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களும் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள ஒரு சில தனியார் மதுபான கூடங்களில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை கணக்கிடாமல் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்து வருவதாகவும் இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதனை தடுக்கும் விதமாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கூடங்களின் உரிமையாளர்களை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கன்னியாகுமரி சரக டி.எஸ்.பி. மகேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:- அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே தனியார் மதுபான கூடங்கள் செயல்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் பார்சல் கொடுக்க கூடாது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். தமிழக அரசு காவல்துறையில் பணி புரியும் அனைவருக்கும் நிறைவான ஊதியத்தை கொடுக்கிறது. இதனால் ஒரு பைசா கூட யாரும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.