கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தருமபுர ஆதீனம் சாமி தரிசனம்
- 2 ஆதீனங்களும் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மேளதாளம் முழங்க பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனர்.
கன்னியாகுமரி:
தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் காசி திருப்பனந்தாள் திருமடத்தின் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சபாபதி சுவாமிகள் ஆகியோர் நேற்று மாலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்களை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் மேளதாளம் முழங்க பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனர்.
பின்னர் 2 ஆதீனங்களும் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள ஸ்ரீ கால பைரவர், ஆஞ்சநேயர், தியாக சவுந்தரி அம்மன், பால சவுந்தரி அம்மன், ஸ்ரீதர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி மற்றும் ஸ்ரீநாகராஜர் சூரிய பகவான் ஆகிய சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மதுரை ஐகோர்ட் நீதிபதி நாகா அர்ஜுன் மற்றும் ஆந்திரா ஐகோர்ட்டு நீதிபதி சாம்பசிவராவ் நாயுடு ஆகியோர் தங்களது குடும்பத்துடன் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தனர். இவர்களும் பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அவர்கள் இன்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். 2 ஐகோர்ட் நீதிபதிகள் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.