திற்பரப்பு பகுதியில் செயல்பட்ட பன்றி பண்ணைக்கு சீல் வைப்பு
- பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
- திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பினந்தோடு மாஞ்சக்கோணம் குளம் அருகே தனியாருக்கு சொந்தமான பன்றி பண்ணை.
கன்னியாகுமரி:
திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பினந்தோடு மாஞ்சக்கோணம் குளம் அருகே தனியாருக்கு சொந்தமான பன்றி பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்த பன்றி பண்ணையில் உள்ள பன்றி கழிவுகள் எல்லாம் அதன் அருகில் உள்ள நீரோடையில் கலந்து திற்பரப்பு அருவியின் அருகில் கலந்து சென்று கொண்டு இருந்தது. மழை காலங்களில் பன்றிகளுக்கு உணவாக போடும் கழிவுகளால் அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.
அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுகாதாரகேடு விளைவிக்கும் பன்றி பண்ணையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.
பேரூராட்சி நிர்வாகம் பன்றி பண்ணை உரிமையாளருக்கு பண்ணையை அகற்றும்படி நோட்டீஸ் கொடுத்தார்கள். அதன்பிறகும் பன்றி பண்ணை அகற்றப்படாமல் செயல்பட்டு வந்தது. இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சியினர் சேர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போராட்டகாரர்களிடம் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.ரவி, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் பன்றி பண்ணை அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு சம்மந்தப்பட்ட பன்றி பண்ணை உரிமையாளருக்கு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது. அதன்பிறகும் அவர் பன்றி பண்ணையை காலி செய்யவில்லை.
இதையடுத்து நேற்று பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக பன்றி பண்ணையை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் மூடி சீல் வைப்பது என முடிவு செய்தனர். குலசேகரம் போலீசார் அனுமதியுடன் வருவாய் துறையினர், சுகாதார துறையினர் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுடன் பேரூராட்சி தலைவர் பொன். ரவி, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், துணைத்தலைவர் ஸ்டாலின் தாஸ் ஆகியோர் பன்றி பண்ணையை பூட்டி சீல் வைத்தனர். உடனே பண்ணை உரிமையாளர் சுமார் 500 பன்றிகளை டெம்போவில் ஏற்றி வேறு பகுதிக்கு கொண்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பன்றி பண்ணை பிரச்சினை முடிவுக்கு வந்தது.