கன்னியாகுமரியில் தந்தையை சரமாரியாக கத்தியால் குத்திய மகன்
- வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் ஆத்திரம்
- கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் ராமலட்சுமி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பால முத்து (வயது 45). இவர் கன்னியாகுமரியில் போட்டோ எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கணேஷ் (18). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை பாலமுத்து தனது மகன் கணேசிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என்று கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இரு வருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ் தனது தந்தை பாலமுத்துவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பாலமுத்துவின் இடது கண் புருவம், இடது வயிறு பகுதியில் கத்தி குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி துடிதுடித்து க்கொண்டிருந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னி யாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொட ர்பாக கணேசை போலீசார் தேடிவருகிறார்கள்.