குளச்சலில் கணவாய் மீன் சீசன் மந்தம் டீசல் செலவுக்கு கூட மீன் கிடைக்காததால் மீனவர்கள் கவலை
- 50 கிலோ எடைக்கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரம் விலை போனது.
- ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.
கன்னியாகுமரி:
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்டோர் வள்ளம், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.
குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகு களுக்கு விதிக்கப்பட்ட 60 நாள் மீன் பிடி தடைக்காலம் கடந்த ஜூலை 31-ந்தேதி நள்ளிர வுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுள்ளன.
ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். இந்த மீன்கள் உணவுக்காக வெளியூர் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இது தவிர கிளி மீன்கள், செந்நவரை, நாக்கண்டம் போன்ற மீன்களும் கிடைக்கும். இந்த வகை மீன்கள் பற்பசை தயாரிப்பு ஆலை மற்றும் மீன் எண்ணை ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வர்.
கடந்த 1-ந்தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற குளச்சல் விசைப் படகுகளில் 3 படகுகள் நேற்று முன்தினம் காலை கரை திரும்பின. இந்த விசைப்படகுகளில் கிளி மீன்கள் ஓரளவு கிடைத்தன.அவற்றுகளை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர். 50 கிலோ எடைக்கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரம் விலை போனது.இது முந்தைய காலம் ரூ.4,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 8 படகுகள் இன்று கரை திரும்பின. இவற்றுள் குறைந்த அளவு ஓலக்கண வாய் மற்றும் தோட்டுக்கண வாய் மீன்கள் கிடைத்தன.அவற்றை மீன் ஏலக்கூ டத்தில் குவித்து வைத்து மீனவர்கள் விற்பனை செய்தனர். தற்போது விசைப்படகுகளில் கணவாய் மீன்களின் சீசனா கும். குறைந்த அளவு கணவாய் கிடைத்ததால் விசைப்படகினர் டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.