உள்ளூர் செய்திகள்

காரமடை நகராட்சி கூட்டம்: கவுன்சிலர்-ஆணையாளர் இடையே காரசார விவாதம்

Published On 2023-11-17 09:38 GMT   |   Update On 2023-11-17 09:38 GMT
  • அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
  • நகராட்சி தலைவர் உஷாவெங்கடேஷ் தலையிட்டு சமரசம்


மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷாவெங்கடேஷ் தலைமை வகித்தார். ஆணையாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் காரமடை நகராட்சியில் தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் சரியான முறையில் குப்பைகளை அகற்றாததால் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

விக்னேஷ் (பா.ஜ.க) : காரமடை நகராட்சியில் குப்பை எடுப்பதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் தலைவர் தான் பதில் கூற வேண்டும்.

வனிதா (அ.தி.மு.க.): தூய்மை பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை எனக்கூறி தற்போது தூய்மை பணிகளை மேற் கொண்டு வரும் ஒப்பந்த தாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பணி புரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் பலருக்கும் சம்பளம் போடவில்லை. பி.எப், இ.எஸ்.ஐ பிடிக்கப்படவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் கிடைக்குமா. தூய்மை பணிகளை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறோம்.

நித்யா (தி.மு.க.): என் வார்டில் எந்த பணிகளும் நடப்பது இல்லை. எனது வார்டில் கோவில் கும்பாபிஷகம் தொடர்பாக புற்கள் வெட்ட ஆட்கள் வேண்டும் என கேட்டேன். ஆணையாளரிடம் தொலை பேசி வாயிலாக பேசும் போது அவர் தரக்குறைவாக பேசினார்.

கோபமாக போன் இணைப்பை துண்டித்தார். இதுதான் நாகரீகமா? எப்படி பேசணும்னு தெரியாதா உங்களுக்கு. மேலும் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மிரட்டுகிறார். நடவடிக்கை எடுங்கள் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து ஆணையாளர் கூறும்போது, நான் அவரிடம் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை, அவர்தான் நகராட்சி ஊழியரை மிரட்டினார். கவுன்சிலராக இருந்தாலும் கூட நகராட்சி ஊழியரை எப்படி அவர் மிரட்டலாம். அதை தான் கேட்டேன் என்றார்.

அப்போது கவுன்சிலர் நித்யாவிற்கு ஆதரவாக தி.மு.க., ம.தி.மு.க, சி.பி.எம் கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பெண் கவுன்சிலர் வார்டு தேவைக்காக கேட்கும் போது ஆணையாளர் எப்படி இப்படி பேசலாம் என வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த ஆணையாளர் மனோகரன் நான் பேசியது தவறு என்று நீங்கள் நினைத்தால் நான் இந்த மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன் என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

அப்போது இவருடன் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், பொறியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின் நகராட்சி தலைவர் உஷாவெங்கடேஷ் ஆணையாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் மன்ற கூட்டத்திற்கு அழைத்து வந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News