கருணாநிதி நினைவு நாணயத்தின் விலை ரூ.2,500-மத்திய நிதித்துறை அதிகாரி தகவல்
- நாணயத்தை முறைப்படி வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது.
- தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும்
சென்னை:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது.
இதற்காக ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதி அமைச்சகத்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் கோரிக்கை வைத்தார்.
இந்த நாணயத்தை தயாரித்து வெளியிட மத்திய அரசு அனுமதி அளித்து கடந்த 12-ந் தேதி அதை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது.
ரூ.100 மதிப்புள்ள நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை குறித்து இப்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகதூண், சத்யமேவ ஜெயதே, பாரத் ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் இந்தியா என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் கலைஞர் எம்.கருணாநிதி உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய தமிழ் வெல்லும் என்ற வாசகமும் இடம் பெறுகிறது.
கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு (1924-2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம் பெறும்.
சுமார் 35 கிராம் எடை கொண்ட இந்த ரூ.100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் இதன் விலை ரூ.2,500 என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாணயம் அச்சிடப்பட்டு வந்தவுடன் ரிசர்வ் வங்கி விற்பனையகங்கள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும் என்று மத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக இந்த நாணயத்தை முறைப்படி வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி ஒரு விழா நடத்தும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.