மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து விரைவில் பேருந்து கட்டணமும் உயரும் - முன்னாள் அமைச்சர் பேச்சு
- மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து விரைவில் பேருந்து கட்டணமும் உயரும் என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கரூர்:
மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து விரைவில் பேருந்து கட்டணமும் உயரும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சட்டம், ஒழுங்கு சீர்கேடு என தமிழக மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே கோவை சாலையில் லாந்தர் (அரிக்கேன்) விளக்கு ஏந்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்து பேசியதாவது,
கடந்த முறை மின் வெட்டு காரணமாக திமுக ஆட்சியை இழந்தது. இம்முறையும் மின்சாரம் காரணமாகவே திமுக ஆட்சியை இழக்கும். விரைவில் மின் வெட்டு அமலுக்கு வரும். மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து விரைவில் பேருந்து பயண–க்கட்டணமும் உயரும். அரவக்குறிச்சி இடைத்தேர்தலி–ன்போது மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செந்தில்பாலாஜி தனது சொந்த பணத்தில் அப்பகுதி மக்களுக்கு 3 சென்ட் நிலம் தருவதாக கூறினார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டு விட்டன. பெண்களுக்கு ரூ.1,000 உரிமத்தொகை வழங்கப்படும் என்றனர் எதுவும் செயல்ப–டுத்தவில்லை என்றார்.
முன்னாள் அமைச்சரும், கட்சி அமைப்பு–ச்செயலா–ளருமான ம.சின்னசாமி, மின் துறைக்கு அதிகளவு கடன் உள்ளது. வட்டி கட்டவேண்டி உள்ளது அதனால் தான் கட்டண உயர்வு என்கிறார் அமைச்சர். முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யட்டும் என்றார்.
கரூர் மாவட்ட ஊராட்சி–க்குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், கரூர் தெற்கு மாநகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர்கள் கரூர் கமலக்கண்ணன், அரவக்குறிச்சி கலைய–ரசன், மாவட்ட ஊராட்சி–க்குழு முன்னாள் துணைத்தலைவர் தானேஷ் என்கிற முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.