தீபாவளிக்கு ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக காட்டாங்கொளத்தூர் - தாம்பரம் சிறப்பு மின்சார ரெயில் சேவை
- சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.
- பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள்
சென்னை:
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் 3-ந் தேதி சென்னைக்கு புறப்படுவார்கள்.
தென் மாவட்டங்கள் மற்றும் இதர பகுதியில் இருந்து புறப்பட்டு வரும் அரசு, தனியார் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து சென்னையில் பல்வேறு இடங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து 2 நாட்களில் 4 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். இது தவிர அரசு பஸ்களிலும் லட்சக் கணக்கானவர்கள் சென்று இருப்பதால் 4-ந் தேதி அதிகாலையில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்புவதால் காட்டாங்கொளத்தூர்-தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
4.30 மணி, 5 மணி, 5.45 மணி 6.20 மணிக்கு காட்டாங்கொளத் தூரில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படும் மின்சார ரெயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் இருந்து மின்சார ரெயில் நின்று செல்லும்... அதே போல தாம்பரத்தில் அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு இரண்டு சிறப்பு மின்சார ரெயில் காட்டாங்கொளத்தூருக்கு இயக்கப்பட உள்ளது.