காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி படுகாயம்
- ஒற்றை காட்டு யானை அனுமய்யாவை திடீரென்று துரத்தி சென்று தாக்கியது.
- யானை தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஓட்டர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட கூலி தொழிலாளி அனுமய்யா (வயது44). இவர் இன்று அதிகாலை கட்டிட வேலை செய்வதற்காக தனது கிராமத்திலிருந்து அந்தேவனப்பள்ளி கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது ஆலஹள்ளி கிராமத்தின் அருகே அவர் நடந்து சென்றபோது அப்பகுதியில் வந்த ஒற்றை காட்டு யானை அனுமய்யாவை திடீரென்று துரத்தி சென்று தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சத்தம் போட்டு அலறினர். அவரது அலறல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள் அங்கு திரண்டனர்.
இதனையடுத்து அங்கு நின்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஆலஹள்ளி, ஒட்டர்பாளையம், மணியம்பாடி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த யானைகளை அடர்ந்த ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.
யானை தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.