ஆலங்குளத்தில் ரூ.9 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
- 5 பேருக்கு பாத்தியப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான இடம் கிடாரகுளத்தில் அமைந்துள்ளது.
- மீட்கப்பட்ட நில பத்திரத்தை வேணு கோபாலிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஒப்படைத்தார்.
தென்காசி:
ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது வாரிசுகளான சுந்தரி, மீனாட்சி, சங்கரமூர்த்தி, சுப்பிரமணியன் மற்றும் வேணுகோபால் ஆகிய 5 பேருக்கு பாத்தியப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான இடம் ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையில் கிடாரகுளத்தில் அமைந்துள்ளது.
அந்த நிலத்தை உரிய அனுமதி இன்றியும் வாரிசு சான்றிதழ் இல்லாமலும் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு சிலர் கிரையம் செய்து கொடுத்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு தரும்படி வேணுகோபால் சமீபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி விசாரணை மேற்கொண்டு சுந்தரி மற்றும் அவரது மகனிடம் விசாரணை மேற்கொண்டு அபகரிக்கப்பட்ட நிலத்தின் கிரைய பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
பின்பு மீட்கப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான நில பத்திரத்தை வேணு கோபாலிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஒப்படைத்தார். அதனை பெற்றுக்கொண்ட வேணுகோபால் மற்றும் அவர்களது சகோதர, சகோதரிகள் உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.