மடிப்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணியில் மண் சரிந்து தொழிலாளி பலி
- ரவி 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்.
- மடிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.
ஆலந்தூர்:
மடிப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் வரை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆதம்பாக்கத்தை அடுத்த உள்ளகரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்காக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 1 மணியளவில் சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த ரவி(வயது45) உள்ளிட்ட தொழிலாளர்கள் கழிவுநீர் கால்வாய் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரவி 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ரவி மீது மண் முழுவதுமாக சரிந்து விழுந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வேலை பார்த்த மற்ற தொழிலாளிகள் சுமார் அரைமணி நேரம் போராடி மண்ணுக்குள் சிக்கிய ரவியை மீட்டனர். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் ரவி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ரவியை மீட்டதும் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சரக்கு ஆட்டோவிலேயே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தொழிலாளி ரவிக்கு, செல்லக்கொடி, சுகன்யா என்ற 2 மனைவிகள் உள்ளனா்.