உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே ரூ.30 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்:4 பேர் கைது

Published On 2024-05-31 06:44 GMT   |   Update On 2024-05-31 06:44 GMT
  • லாரியை சோதனை செய்தபோது பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.
  • 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர்.

உளுந்தூர்பேட்டை:

புதுவையில் இருந்து மினிலாரி மற்றும் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனாவுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்வாணன் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் இன்று காலை உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கசாவடியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்த நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரியை பின்னால் ஜீப்பில் விரட்டி சென்றனர். சிறிது தூரத்தில் அந்த மினிலாரி மற்றும் காரை மடக்கி பிடித்தனர்.

அப்போது லாரி மற்றும் காரில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர். பின்னர் லாரியில் சோதனை நடத்திய போது அதில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.

அந்த மதுபாட்டில்கள் புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தி செல்வது விசாரணையில் தெரியவந்தது. மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சமாகும். மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்களை கடத்தி வந்த புதுவை அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(வயது42), புதுவை ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(46),சதீஷ் (31) மற்றும் பண்ருட்டி தட்டாம்பாளையத்தை சேர்ந்த ரங்கா(29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News