மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.1 கோடியே 32 லட்சம் கடனுதவி:பதிவாளர் சுப்பையன் வழங்கினார்
- கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார்.
- மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுப்பையன் நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் சுய உதவி குழுக்கள், மாற்றத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.1 கோடி 32 லட்சம் கடன் வழங்கினார். நபார்டு நிதி உதவி கீழ் வழி சோதனை பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ. 6.50 லட்ச மதிப்பில் சரக்கு வாகனம் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதியதாக துவக்கப்பட உள்ள வண்டிப்பாளையம் கிளையினை ஆய்வு செய்தார். மேலும் கடலூர் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி, கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திலீப்குமார், துணைப் பதிவாளர்கள் துரைசாமி, ராஜேந்திரன், அன்பரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அலுவலர் எழில்பாரதி மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.