21 கிலோ கஞ்சா கடத்தல்-3 வாலிபர்கள் கைது
- ஆந்திராவில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
மதுரை
மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை ஆகியவை கொடிகட்டி பறந்து வருகின்றன. எனவே அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மீனாட்சி அம்மன் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 21 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த மதன்குமார் (30) என தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி மதுரையில் விற்று வந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.எஸ்.காலனி போலீசார் கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த செக்கானூரணியை சேர்ந்த குபேந்திரன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் விளாச்சேரி மெயின் ரோடு முனியாண்டி புரம் சந்திப்பில் கஞ்சா விற்ற மகாவிஷ்ணு (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.