- மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீர் உயர்ந்துள்ளது.
- கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை
மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீரென அதிகரித்துள்ளது. கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் அனைவராலும் மிகவும் விரும்பி வாங்கப்படும் பூக்களில் மல்லிகை முதலிடம் பெற்றுள்ளது. அந்த வகையில் அவ்வப் போது மல்லிகையின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் பண்டிகை காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மல்லிகை பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கமாகி விட்டது.
தற்போது சீசன் மந்தமாக இருப்பதாலும் மல்லிகை பூக்கள் வரத்து மதுரை மார்க்கெட்டில் கணிசமாக குறைந்துள்ளதாலும் விலை திடீரென அதிகரித்துள்ளது. வருகிற 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா என்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக இருப்ப தாலும் அதன் விலை உயர்வு இருமடங்காக அதிகரித்து உள்ளது.
இன்று காலை மல்லிகை பூ கிலோவுக்கு 1200 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது அதுபோல முல்லை பிச்சி ஆகிய பூக்களின் விலை 700 ரூபாயாக விற்கப்பட்டது.
சம்மங்கி, அரளி 200 ரூபாய்க்கும், செவ்வந்தி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதுபோல மற்ற பூக்களும் சற்று விலை அதிகரித்து உள்ளது.