விடுமுறை அளிக்காத 125 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- மதுரை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 125 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.
மதுரை
தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர்/தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், உத்தரவின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின் படியும் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுரை மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேசிய விடுமுறை தினங்களில் கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் உரிய படிவத்தில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
அவர்களுக்கு வேலை அளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வின் போது மேற்கண்ட சட்ட விதிகளை அனுசரிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 78 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 47 உணவு நிறுவனங்கள் ஆக மொத்தம் 125 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.