உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ.5 லட்சம் பணம்-நகைகள் திருட்டு

Published On 2023-06-27 08:46 GMT   |   Update On 2023-06-27 08:46 GMT
  • அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ. 5 லட்சம் பணம்-நகைகள் திருட்டு நடந்ததாக போலீசில் மனைவி பரபரப்பு புகார் செய்தார்.
  • பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

மதுரை

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது65). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2001-2006-ம் ஆண்டு வரை சமயநல்லூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவில் உற்சவ விழா தொடங்கியது. இதில் முதல் மரியாதை யாருக்கு? என்பது தொ டர்பாக பொன்னம்பலம் தரப்புக்கும், தி.மு.க. கிளைச் செயலாளர் வேல்முருகன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேல்முருகன் தரப்பினர், பொன்னம்பலம் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தினர். வீட்டில் நின்ற காருக்கு தீ வைத்தது மட்டுமின்றி, அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

கோவில் மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய சத்திரப்பட்டி போலீசார், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தி.மு.க.பிரமுகர் வேல் முருகன், ராஜபாண்டி, செந்தமிழன், கலைவாணன், ராஜ்மோகன், படையப்பா, சங்கர், அருண் உள்பட 18பேர் மீதும், வேல்முருகன் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொன்னம்பலம்,

அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் மற்றும் பழனிவேல், சின்னகருப்பு, விஜய், வேலுமணி உள்பட 20பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

அவர்களில் வேல்மு ருகன், செந்தமிழன், ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 6பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள், சத்திரப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டை, எதிர்தரப்பினர் சூறையாடிய போது பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.5லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News