மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள்
- மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
- கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சொர்ணஆகார்ஷன பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், சாமி தரிசனம் செய்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.
மதுரை
தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறந்தது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
அவர்கள் அதிகாலை முதல் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வந்ததால் மீனாட்சி அம்மன் கோவில் வெளியிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இது பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டுச்சேலை- மனோரஞ்சிதம் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்களின் வசதிக்காக மாசி வீதிகள் மற்றும் ஆடி வீதிகளில் தற்காலிக கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதன கோபால சுவாமி கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.