எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா பேரவையின் அணிவகுப்பு மரியாதை
- மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா பேரவையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அம்மா பேரவை தொண்டர் படைக்கு பயிற்சியை வழங்கினார்.
மதுரை
வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அம்மா பேரவை, இளைஞர் பாசறை, மகளிர் அணியில் உள்ள தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் நாளில் அன்று காலை அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியினை ஏற்றுகிறார். அந்த இடத்தில் அம்மா பேரவை தொண்டர் படையினர் சல்யூட் அடித்து ராணுவ மரியாதை போல் அணிவகுப்பு செய்கின்றனர். அதனுடைய ஒத்திக்கைகான அணிவகுப்பு வலையங் குளம் ரிங் ரோட்டில் உள்ள மாநாட்டு திடலில் நடைபெற்றது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் அம்மா பேரவை தொண்டர் படைக்கு பயிற்சியை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு மாநாடு முகப்பில் அணிவகுப்பு மரியாதை நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், எஸ்.எஸ். சரவணன், தமிழரசன், சதன் பிரபாகரன், மாணிக்கம், டாக்டர் சரவணன், நிர்வாகிகள் இளங்கோவன், தனராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் ஆயத்த பணிகளை தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
வருகிற 20-ந் தேதி காலை பொதுச் செயலாளர் எடப்பாடியார் மாநாட்டு முகப்பு முன்பு அமைக்கப்ப ட்டுள்ள 51அடியுள்ள கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியினை ஏற்றுகிறார். அப்போது அம்மா பேரவை தொண்டர் படையின் சார்பாக ராணுவ மரியாதை போல் சல்யூட் அடித்து அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்த தொண்டர் படை ராணுவ சிப்பாய் போல அணிவகுக்க உள்ளனர்.மேலும் இந்த தொண்டர் படையில் இளைஞர் பாசறை உள்ளிட்ட பல்வேறு அணிகள், பங்கேற்க உள்ளது. அதனை தொடர்ந்து மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு இருக்கைகள் ஏற்படுத்தித் தரவும், அவர்களுக்கு வேண்டிய குடிநீர், உணவு உள்ளிட்ட உரிய வழிகாட்டுதலை தொண்டர்படை களப்பணியாற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.