அவனியாபுரத்தில் தேங்கும் குப்பைகள்-குடிநீர் தட்டுப்பாடு
- அவனியாபுரத்தில் 92, 100-வது வார்டுகளில் தேங்கும் குப்பைகள்-குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மதுரை
மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட அவனியாபுரம் பகுதியில் உள்ள 92, 100 ஆகிய வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த வார்டுகளில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் மாநகராட்சி சார்பில் தினமும் மேற்கண்ட வார்டுகளில் குப்பைகள் நவீன பேட்டரி வாகன மூலம் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால் பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டன இதனால் குப்பைகள் அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே மலை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
இதை கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாடு, குப்பைகள் தேங்கும் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் பூந்தோட்ட நகர், செம்பூரணி ரோடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் அவனியாபுரத்தில் உள்ள மாநகராட்சி வரி வசூலிக்கும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த 100-வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினைகள் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.