- கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி மதுரை பேராயர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.
மதுரை
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை கத்தோலிக்க கிறிஸ்தவ உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாட காத்திருக்கும் மனுகுலத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மீட்பரின் வருகையை கணித்த ஞானிகளும், வல்லுநர்களும் ஆவலோடு காத்திருந்த காலம் கனிந்த அற்புத நாள். இயேசுவின் பிறப்பு தனித்துவம் மிக்கது.
இயேசுவின் பிறப்பால் பெத்லகேம் என்ற சிறிய இடம், உலகம் அறியும் உன்னத இடமாக மாறிப் போனது. மாடுகள் அடையும் மாட்டுத்தொழுவம் மாட்சி மை பெற்றது. இயேசு இதயத்தில் பிறக்க இடம் அளிக்க துணிந்து விட்டால் நம் வாழ்வு புனிதமடையும். சமூக அவலங்கள் அகலும். சண்டை சச்சரவுகளுக்கு துணை நிற்போருக்கு சவுக்கடி கிடைக்கும். தீவிரவாதம் வேரறுக்கப்படும்.
புதிதாக பிறந்துள்ள இறைமகனின் அருளால், புத்தாண்டில் புதிய மாற்றத்தை கொண்டு வருவோம். இறைவன் கொண்டு வந்த அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், ஏழை களுக்கு மறுவாழ்வு போன்ற மதிப்புகளை பகிர்வோம். மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.
தோல்விகளை துரத்தி, வெற்றிகளை குவித்து. பகைமை மறந்து, சமூக அநீதிகளை அகற்றி, பெண்மையை போற்றி, சாதிகளை சாகடித்து, வறுமையை ஒழித்து, வாழ்வாங்கு வாழ்ந்திட கிறிஸ்துமஸ் திருநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.