அகவிலைப்படி வழங்க கோரி அரை நிர்வாண போராட்டம்
- மதுரையில் அகவிலைப்படி வழங்க கோரி அரை நிர்வாண போராட்டம் நடந்தது. இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயதானவர்களுக்கு 10 சதவீதம் பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மதுரை
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மதுரை கே.புதூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஓய்வூதி யர்கள் மேல் சட்டை அணியாமலும், பெண்கள் கருப்பு முகக்கவசம் அணிந்தும் போராட்டம் நடத்தினர்.
அப்போது மின்வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது. விதவைகள், விவாகரத்து பெற்றோர் மற்றும் ஊன முற்றோருக்கான குடும்ப ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயதானவர்களுக்கு 10 சதவீதம் பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். ஒப்பந்த ஓய்வூதியர் பனிக்காலத்தையும் ஓய்வூதியத்தில் கணக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் மாரிச்சாமி, செயலாளர் சர்தார் பாட்ஷா, பொருளாளர் பால்ராஜ், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொருளாளர் பால்ராஜ் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.