- வீடுகளை சாக்கடை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
- இதனால் 1 மணி நேர போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை பாதாள சாக்கடை கழிவு நீர் சூழ்ந்தது.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் கழிவு நீர் குளம் போல் தேங்கியது.
இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், உரிய நேரத்தில் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்தனர்.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மேல அனுப்பானடி- சிந்தாமணி மெயின் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
வீடுகளை சூழ்ந்துள்ள கழிவு நீரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் அந்த பகுதிக்கு வந்து கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேர போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.