மல்லிகை பூக்கள் விலை 'திடீர்' சரிவு
- மல்லிகை பூக்கள் விலை ‘திடீரென’ சரிந்தது.
- திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு.
மதுரை
திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் மல்லிகை பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வது வழக்கம். அதன்படி முகூர்த்த நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில் மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை கிலோ 4 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படும்.
அதுபோல் திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு. தற்போது திருவிழா காலங்கள் முடிந்ததாலும், அதிக அளவில் முகூர்த் தங்கள் இல்லாததாலும் மதுரையில் மல்லிகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
மேலும் பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ள தால் மதுரை மாட்டுத்தா வணியில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூக்களின் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் மல்லிகை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மற்ற பூக்களான பிச்சி 200 ரூபாய்க்கும், முல்லை 250 ரூபாய்க்கும், சம்மங்கி 50 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 50 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதாலும், விற்பனை மந்தமாக உள்ளதாலும், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இன்னும் சில நாட்களில் முகூர்த்தங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை வழக்கம்போல சீராக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.