உள்ளூர் செய்திகள்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களின் நடை சாத்தப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டதால் கிழக்கு வாசல் அம்மன் சன்னதி முன்பு பக்தர்கள் வெளியே நின்று சாமி கும்பிட்டனர்.

சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைப்பு

Published On 2022-11-08 09:47 GMT   |   Update On 2022-11-08 09:56 GMT
  • சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டது.
  • 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

மதுரை

சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 மணி வரை ஏற்படும் என்பதால் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆகம விதிப்படி கோவில் நடைகள் சாத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று சந்திர கிரகணம் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி- சாயரட்சை பூஜைகள் முடிந்த பிறகு கோவில் நடை இன்று காலை 9.30 மணிக்கு சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கிரகண நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.

சந்திர கிரகணம் முடிந்து இன்று இரவு 7.30 மணிக்கு பிறகு நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி 22 உப கோவில்களின் நடைகளும் இன்று சாத்தப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து மத்திம காலத்தில் சுவாமிகளுக்கு மாலை 4.30 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்படும். அதன் பிறகு சந்திரசேகரர் புறப்பாடு நடக்கும். இரவு 7 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கும். 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன் பிறகு பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News