கனமழைக்கு உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை
- மதுரையில் கனமழைக்கு உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
- கனமழையால் 4பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் முழுவதிலும் நேற்று தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழை நீரானது வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.
மழை பெய்து கொண்டிருந்த போது மதுரை ஆண்டாள்புரம் மேற்குதெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தச்சு்வேலையில் ஈடுபட்டுகொண்டிருந்ந ஆண்டாள்புரம் எச்.எம்கா.எஸ். காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் (52), ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (38) ஆகியோர் மீதும் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதி பகுதியில் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய ஆண் மற்றும் பெண் உயிரிழந்த நிலையில் மழைநீரில் சடலமாக கிடந்தனர். இருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனரா? இடி சத்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உயிரிழந்தனரா? வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து திடீர்நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் தொடர்ந்து இடியுடன் பெய்த கனமழையால் 4பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற மழைக் காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்ப–ங்களுக்கு சென்று ஆறுதல் கூறி, உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர்-சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு இனிவரும் காலங்களில் இதுபோன்று துயர சம்பவங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியினை அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.