அண்ணன்-தங்கையை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்கள்
- அண்ணன்-தங்கையை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்கள் கண்காணிப்பு காமிரா மூலம் சிக்கினர்.
- விசாரணையில் கைதான 4 பேர் மீதும் மாநகராட்சி பகுதி போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மதுரை
மதுரை சீமான் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் பாண்டிராதா (வயது 21). இவர் சம்பவத்தன்று இரவு தனது சகோதரர் நல்லமணிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பக்கத்து தெருவுக்கு சென்றார். பின்னர் அவர் தனியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அவர் சீமான் நகர், அம்மன்கோவில் தெரு சந்திப்பில் வந்தபோது, 4 பேர் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாண்டிராதா அணிந்திருந்த 1 செயினை பறிக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சிய டைந்த அவர், சத்தம் போட்டார். இதனை கேட்டு அவரது சகோதரர் நல்லமணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது மர்ம நபர்கள் பாண்டிராதா அணிந்திருந்த 1 பவுன் செயினை பறித்ததுடன், நல்லமணி வைத்திருந்த செல்போனையும் பறித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி பாண்டிராதா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் துப்பு துலங்கவில்லை. இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் பாண்டிராதாவிடம் நகை பறித்தது சீமான் நகர் பாரதிபுரம் ராஜபாண்டி (25), நவீன்குமார் (20), முத்துப்பாண்டி (23), விஸ்வா (20) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் பறித்து சென்ற நகை மற்றும் செல்போனை மீட்டனர்.
விசாரணையில் கைதான 4 பேர் மீதும் மாநகராட்சி பகுதி போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.