- மேலூர் அருகே உள்ள திருமறைநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
- பக்தர்களுக்கு வாழைப்பழங்கள் சூறை வீசப்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர்-வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது.
இங்கு கடந்த 2-ந்தேதியன்று வைகாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேலூருக்கு திருமறைநாதர் எழுந்தருளும் மாங்கொட்டை திருவிழா கடந்த 7-ந் தேதி நடந்தது. நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருமறைநாதர், வேதநாயகி அம்மன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தனர். கிராம பெரியவர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.
அதனை தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் மேலூர், திருவாதவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் 4 மாடவீதிகளில் வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து அம்மன் தேர் இழுக்கப்பட்டது. அதனை பெண்கள் மட்டும் இழுத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு வாழைப்பழங்கள் சூறை வீசப்பட்டது.