பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்
- பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
- பலர் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக தெரிய வருகிறது.
மதுரை
மதுரை ஆண்டாள்புரம் எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை கீழசந்தைபேட்டை பகுதியில் சாம்பியன்ஸ் கார்ட்ஸ் பி.லிட். என்ற பெயரில் மதுரையை சேர்ந்த கருணாகரன், மணிகண்டன், ரமா மற்றும் தேனியை சேர்ந்த பாண்டியராஜன், சிவகாமி ஆகியோர் தாங்கள் திருமண அழைப்பிதழ், கவர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் பணம் டெபாசிட் செய்தால் அதிக வட்டி தருகிறோம் என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள் முதலீடு செய்தால் கம்பெனியில் இருந்து வரும் லாபத்தில் பங்கு தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறி நம்ப வைத்தனர். இதனால் அந்த நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தனர். எனவே தனது பணத்தை மீட்டு தருமாறு புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில் பொருளா தார குற்றப்பிரிவு போலீ சார், அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நிறுவனத்தில் பலர் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக தெரிய வருகிறது.
எனவே அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து திரும்ப கிடைக்காத பொதுமக்கள் யாரேனும் இருப்பின் தக்க ஆவணங்களுடன் மதுரை தபால்தந்திநகர் விரிவாக்கம், சங்கரபாண்டியன் நகரில் இயங்கி வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். புகாரின் பேரில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தொடர்பாக அலுவலக தொலைபேசி எண் 0452-2642161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.