வடலூர் நகரில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகும் முகமூடி கொள்ளையர்கள்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் தூங்கா நகரம் என்று கூறும் அளவிற்கு 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். அதனால் வடலூர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி, அதற்கேற்ப வாழ்ந்து காட்டிய ராமலிங்க அடிகளார் என்கிற வள்ளலார் பிறந்த பகுதி வடலூராகும். இங்கு அமைந்துள்ள ஞானசபை உலகளவில் பிரசித்தி பெற்றதாகும்.இந்த நகரின் மையப்பகுதியில் ராகவேந்திரா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு செல்வந்தர்களும், வசதி படைத்தவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலும், வயதானவர்களும், பெண்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களது குடும்பத்தார் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பணி செய்கின்றனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு அண்ணா நகருக்கு 2 மர்நபர்கள் வந்தனர். ஆஜானு பாகுவான இளைஞர்களாகிய இருவரும் கால்சட்டை மட்டும் அணிந்திருந்தனர். தங்களின் செறுப்பினை இடிப்பில் கட்டியிருந்த கயிறில் தொங்கவிட்டிருந்தனர். மேலும், கண்களை தவிர வேறெதும் தெரியாத அளவிற்கு முகமூடி அணிந்திருந்தனர்.அண்ணாநகரில் இருந்த ஒரு வீட்டின் பின்புறம் சென்ற அவர்கள், பின்பக்க கதவினை உடைத்து உள்ளே நுழைந்தனர். அறையில் படித்திருந்த கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக் கயிறை பறித்தனர். இதனால் பதறிப்போய் எழுந்த கர்ப்பிணி, வாலிபர்களை எட்டி உதைத்து கூச்சலிட்டார்.மருமகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த மாமனார் வாலிபர்களை தாக்கினார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மர்மநபர்கள் தப்பிக்க முயன்றனர். மாமனாரும், மருமகளும் அவர்களை விரட்டியபோது, கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பக்கத்து தெருவிற்கு சென்ற மர்மநபர்கள், மற்றொரு வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டிற்குள் இருந்த மனநலம் குன்றிய பெண்ணின் காதில் இருந்த கம்மலை திருடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தாரிடம் இருந்து 2 வாலிபர்களும் தப்பி விட்டனர்.அண்ணாநகரை விட்டு வெளியேறி 2 வாலிபர்களும் அருகில் உள்ள ராகவேந்திரா நகருக்கு சென்றனர். நகரின் கடைசி வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர். பின்பக்க கதவை உடைக்க முயற்சித்தனர். சுமார் ஒன்னரை மணி நேரம் போராடியும் கதவினை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து 2 வாலிபர்களும் வெளியேறினர். இது அந்த வீட்டிலிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியது.இந்த 3 குடும்பத்தாரும், நேற்று காலை வடலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்த போலீசாரிடம் புகார் கொடுத்தனர். 3 பேரும் கூறிய அங்க அடையாளங்கள் ஒன்றாக இருந்தது. இதையடுத்து ராகவேந்திரா நகரில் இருந்த வீட்டில் பதிவாகிய சி.சி.டி.வி. கேமிரா பதிவினை மற்றவர்களுக்கு போலீசார் காட்டினர். அவர்களும் தங்களது வீட்டிற்கு வந்தவர்கள் இவர்கள் தான் என்று உறுதிபடுத்தினர்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் வடலூர் நகரின் மையப்பகுதியில் மூகமூடி அணிந்த 2 வாலிபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பியுள்ளனர். மேலும், கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக புகாரினை பெற்ற வடலூர் போலீசார், முகமூடி அணிந்த மர்மநபர்களை பிடித்த பிறகு வழக்கு பதிவு செய்கிறோம் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் வடலூர் நகரில் வசிப்பவர்களுக்கு மிகவும் வேகமாக பரவியது. இதனால் இரவு நேரங்களில் வடலூர் நகரில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வடலூர் போலீசாரை பொறுத்தவரையில் காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மட்டுமே பணி செய்கின்றனர். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, கடலூர் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் சூப்பிரண்டும் இதில் தலையிட வேண்டும். வடலூரில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதை உறுதிபடுத்த வேண்டும். முகமூடி கொள்ளையர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும். வடலூர் மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடலூர் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.