உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது- அமைச்சர் சேகர்பாபு

Published On 2022-06-05 10:06 GMT   |   Update On 2022-06-05 10:06 GMT
  • சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
  • உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன, ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும், அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மற்றபடி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை.

பொதுக்கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும். ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நிவேதா முருகன் எம்.எல்.ஏ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் பி. எம் ஸ்ரீதர், மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஞானஇமய நாதன், இளையபெருமாள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள் அலுவலர்கள் என ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News