கொரோனா தொற்று அதிகரித்தாலும் பாதிப்பு இல்லை- மேயர் பிரியா தகவல்
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 60 முதல் 80 ஆக இருந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னை:
சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மண்டலங்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை மேயர் பிரியா கூறியதாவது:-
கொரோனா தொற்று அதிகரிப்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது அதன்படி சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 60 முதல் 80 ஆக இருந்தது.
நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான கொரோனா நடைமுறைகளின் படி தொற்று பாதித்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை தொற்று பாதித்தவர்கள் யாரும் மோசமான நிலையை அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் அளவுக்கு இல்லை. அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அவர்களை கண்காணித்தும் வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் ஒட்டப்படவில்லை. பொதுமக்களை விழிப்புடனும் தகுந்த பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.