உள்ளூர் செய்திகள்

குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்- கே.என்.நேரு

Published On 2024-06-29 07:28 GMT   |   Update On 2024-06-29 07:28 GMT
  • முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
  • புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு.

சென்னை:

சட்ட சபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தி.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலை பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுமா எனவும் தியாகராய நகர் தொகுதியில் உள்ள ஏழு வார்டுகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனை இருப்பதாகவும், எனவே புதிய சேம்பர்கள் அமைத்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. (தி.மு.க.) கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது:-

தியாகராய நகரில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த ஒடிசா நிறுவனத்துடன் ஆலோசித்து 24 மணி நேரமும் முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

முத்துரங்கன் சாலை பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனே கட்டிக்கொடுக்கபடும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு இந்தாண்டு ரூ.900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

தியாகராயநகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்து ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக ஜெ. கருணா நிதி பேசுகையில், தி. நகர் கண்ணம்மா பேட்டை பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருக்கிறது. லாரி மூலம் தான் சப்ளை ஆகிறது.

இந்த இடம் கடைசி பாயிண்ட். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தண்ணீர் வரும்போது இங்கு குறைந்து விடுகிறது. எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்றார். அத்துடன் தொகுதி முழுவதும் பம்பிங் ஸ்டேசன் சரிவர இயங்காததால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகவும் தெரிவித்தார்.

ஜெ/கருணாநிதி கூறிய இரு பிரச்சினைகளையும் உடனே நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.

Tags:    

Similar News