உள்ளூர் செய்திகள்

கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம்- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் எச்சரிக்கை

Published On 2023-05-12 04:49 GMT   |   Update On 2023-05-12 04:49 GMT
  • கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
  • மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14-ந் தேதிவரை செல்ல வேண்டாம்.

சென்னை:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய வானிலை ஆய்வு மையம் 11-ந் தேதி (நேற்று) காலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், இதற்கு 'மோக்கா' என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியை கடந்து, 13-ந் தேதியன்று சற்று வலுவிழந்து, 14-ந் தேதியன்று மணிக்கு 120 முதல் 145 கி.மீ. வேகத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மருக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத்துறை ஆணையருக்கும், கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14-ந் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News