புதிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது- மத்திய இணை மந்திரி பேச்சு
- தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார்.
- இளைஞர்கள் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார். ஐநா சபையில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தமிழ் இலக்கியத்தை மேற்கோள் காட்டி பிரதமர் தமது உரையை தொடங்கினார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மகாகவி பாரதியார் இருக்கை தொடங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
உலகம் முழுவதும் இந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலாக இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இருக்கிறார். அனைவரும் தாய்மொழியில் கற்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் தமிழ் போன்ற மாநில மொழிகள் உட்பட தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரகாசிக்கின்ற இளம் தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம். அவர்கள் இந்தியாவை உலக அளவில் முன்னேற்றுவார்கள். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.
கொரோனா நெருக்கடியிலிருந்து பல நாடுகள் மீளமுடியாத நிலையில், இந்தியா இதிலிருந்து மீண்டு வந்திருப்பதோடு இதுவரை நாட்டில் கட்டணமில்லாமல் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.