சாலையில் ஒய்யாரமாக உலா வந்த ஒற்றை காட்டுயானை- அச்சத்தில் தவித்த வாகன ஓட்டிகள்
- யானை சாலையின் நடுவே நின்று கொண்டது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
உடுமலை:
கேரள மாநிலம் மூணாறுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வனப்பகுதியான உடுமலை-மூணாறு சாலையில் அவ்வப்போது யானைகள் உலா வருவது வழக்கம். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உடுமலை-மூணாறு சாலையில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ஒற்றை யானை ஒய்யாரமாக உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
மேலும் அந்த யானை சாலையின் நடுவே நின்று கொண்டது. நீண்ட நேரமாக நின்றதால் உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் பலர் தங்களது செல்போன்களில் யானையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பிறகு அந்த வழியாக போக்குவரத்து சீரானது.