உள்ளூர் செய்திகள்

ராமநதி ஆற்றில் செங்கல் சூளைக்கு பயன்படுத்தப்படும் மோட்டார்களை அப்புறப்படுத்த வேண்டும்- பஞ்சாயத்து கூட்டமைப்பு தீர்மானம்

Published On 2023-06-26 08:42 GMT   |   Update On 2023-06-26 08:42 GMT
  • ஊராட்சி செயலர்களுக்கு நிர்வாகம் சம்பந்தமாக அடிக்கடி கூட்டம் வைப்பதால் ஊராட்சி நிர்வாகம் பாதிக்கப்படுகிறது.
  • ராமநதி, கடனாநதி ஆறுகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் தலைவர் டி.கே. பாண்டியன் தலைமையில் செயலாளர் பூமிநாத் முன்னிலையில் நடைபெற்றது.

பஞ்சாயத்து தலைவர்கள் ஏ.பி. நாடானூர் அழகுதுரை, பொட்டல்புதூர் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், மேலஆம்பூர் ஊராட்சி குயிலி லட்சுமணன், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன் மற்றும் ரவணசமுத்திரம் முகமது உசேன், தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேம ராதா ஜெயம், பாப்பான்குளம் முருகன் கீழ ஆம்பூர் மாரிசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு நிர்வாகம் சம்பந்தமாக அடிக்கடி கூட்டம் வைப்பதால் ஊராட்சி நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. கடையம் பகுதிகளில் குளங்கள், கால்வாய்கள் மடைகள் போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும், ராமநதியில் இருந்து இரண்டாத்துமுக்கு வரை செங்கல் சூளையில் உள்ள மோட்டார்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்க முடியும். ராமநதி, கடனாநதி ஆறுகளில் உள்ள சீமை கருவேல மரங்களையும், புதர் செடிகளையும் அகற்ற வேண்டும். தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News