உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் நூதன முறையில் 12 பவுன் நகை கொள்ளை

Published On 2023-11-30 09:52 GMT   |   Update On 2023-11-30 09:52 GMT
  • பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65). நேற்று மாலை பரமத்திவேலூர் பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள் என அந்த வாலிபர் மணிமேகலையிடம் கூறியதாக தெரிகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டை சேடர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பழனிசாமி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65). நேற்று மாலை பரமத்திவேலூர் பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவரை பின்தொடர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சுக் கொடுத்து உள்ளார். அப்போது மாலை நேரங்களில் தங்க நகைகளை அணிந்து கொண்டு செல்வது பாதுகாப்பானது அல்ல. இவ்வாறு நகை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள் என அந்த வாலிபர் மணிமேகலையிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து மணிமேகலை அவர் அணிந்திருந்த 12 பவுன் நகை நகைகளை கழட்டி பையில் வைத்துள்ளார்.

ஆனால் அந்த வாலிபர் அப்படியே பையில் வைக்க வேண்டாம் எனக் கூறி அவரிடம் இருந்த ஒரு காகித பையை கொடுத்து நகையை வாங்கி கவரில் வைத்துள்ளார். இதைதொடர்ந்து அங்கிருந்து அந்த வாலிபர் மாயமானதாக தெரிகிறது. பையில் வைத்த நகைகளும் மாயமானது.

இந்த சூழ்நிலையை அறிந்து சுதாரித்துக் கொண்ட மணிமேகலை நகையை திருடி சென்றதாக கூச்சலிட்டு உள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து அந்த வாலிபர் சென்ற திசையில் தேடி பார்த்தனர். ஆனால் வாலிபர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மாலை நேரத்தில் மூதாட்டியிடம் தங்க நகையை நூதன முறையில் கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News