உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் உமா ஆய்வு செய்த காட்சி.

நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 28 வாகனங்களை திருப்பி அனுப்பிய கலெக்டர்

Published On 2023-05-24 09:37 GMT   |   Update On 2023-05-24 09:37 GMT
  • தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
  • நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்:

தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில், வருவாய் துறை, பள்ளிக்கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளின்படி இயங்குகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் நாமக்கல் தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குட்பட்ட 27 பள்ளிகளை சேர்ந்த 269 பள்ளி வாகனங்களும், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 23 பள்ளிகளை சேர்ந்த 217 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 486 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 458 பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது. மீதமுள்ள 28 பள்ளி வாகனங்கள் குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என்று கலெக்டர் அவற்றை திருப்பி அனுப்பினார்.

மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், எப்சி சர்டிபிகேட், பர்மிட், இன்சூரன்ஸ், புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்றும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர் களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 581 பள்ளி வாகன டிரைவர் களுக்கு உடல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை கலெக்டர் டாக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் ஆர்.டி.ஓ. (பொ) சுகந்தி, ஆர்.டி.ஓ.க்கள் முரு கேசன், முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News