உள்ளூர் செய்திகள்

நடைமேடை நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நெல்லை- பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில்

Published On 2023-09-29 08:49 GMT   |   Update On 2023-09-29 08:49 GMT
  • நெல்லை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடை மேடைகள் பயன்பாட்டில் உள்ளது.
  • ரெயில்களை கையாள முடியாமல் நெல்லை ரெயில் நிலையம் திணறி வருகிறது.

நெல்லை:

தென்மாவட்ட ரெயில் நிலையங்களில் முக்கியமானது நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம். நெல்லை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடை மேடைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரெயில்களை கையாளுவதில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.

நெல்லை ரெயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவிலில் இருந்து வரும் ரெயில்கள் மற்றும் வடபகுதியில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து தெற்கு நோக்கி வரும் ரெயில்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் அணிவகுத்து வருவதால் 5 நடைமேடைகள் போதுமானதாக இல்லை.

தற்போது சென்னை நோக்கி செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் முதலாவது நடை மேடையிலும், அனந்தபுரி- கன்னியாகுமரி ரெயில்கள் 2-வது நடைமேடையிலும், நாகர்கோவில் - நெல்லை ரெயில் 3-வது நடைமேடையிலும், நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் 4-வது நடைமேடையிலும், திருச்செந்தூர் - நெல்லை ரயில் 5-வது நடைமேடையையும் வந்து செல்கின்றன.

பின்னர் செங்கோட்டையில் இருந்து நெல்லை வரும் ரெயில் திருச்செந்தூர் ரெயிலுக்கு பின்பாக 5-வது நடைமேடையில் மெதுவாக கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. இதே நேரத்தில் தான் தூத்துக்குடி - நெல்லை ரெயில், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், ஈரோடு - நெல்லை ரெயில் ஆகியவை வரிசை கட்டி நிற்கின்றன.

தற்போது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதால் காலை நேரத்தில் ரெயில்களை கையாள முடியாமல் நெல்லை ரெயில் நிலையம் திணறி வருகிறது.

எனவே நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள இட நெருக்கடியை குறைப்பதற்கு கூடுதல் நடைமேடைகளை அமைத்து நெல்லையோடு நிற்கும் பாலருவி ரெயிலை தூத்துக்குடிக்கும், ஈரோடு நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து செங்கோட்டை பண்பொழியை சேர்ந்த ரெயில் பயணி சுரேஷ் கூறுகையில், பாலக்காடு - நெல்லை பாலருவி விரைவு ரெயிலை தூத்துக்குடிக்கு நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் உடனடியாக இந்த நீட்டிப்பை செய்ய வேண்டும்.

மதுரைக்கு ரெயில்களே இல்லாத ஒரே வழித்தடமான அம்பை வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீடிக்க வேண்டும். அப்போதுதான் செங்கோட்டை நாகர்கோவில், திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் ரெயில்களையும் வடக்கில் இருந்து நெல்லை நோக்கி வரும் ரெயில்களையும் தாமதம் இல்லாமல் ரெயில் நிலையத்தின் உள்ளே வர முடியும். இவ்வாறு செய்வதால் திருச்செந்தூர், நெல்லை மற்றும் செங்கோட்டை நெல்லை ரெயில் வழித்தடத்தில் உள்ள பயணிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரெயில்களை பிடிப்பதற்கு வசதியாக அமையும். மேலும் கூடுதல் நடைமேடைகள் அமைத்தால் தான் வருங்காலங்களில் நெல்லையில் இருந்து கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News