வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
- தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
- இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
சென்னை:
தென் மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. தமிழகத்தில் இன்னும் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
இந்த நிலையில், வட கிழக்கு பருவ மழை 3-வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை (4-ந் தேதி) ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் அது குறைந்த காற்றழுத்தமாக உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக் கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். 6-ந் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.